Ticker

10/recent/ticker-posts

கோமதி டீச்சரும் புது அடிமையும்! - சிறுகதை

டீச்சர் சொன்னா செய்ய வேண்டும் என்று அவன் மூளையில் பதிவாகியிருந்தது. இன்னொரு பக்கம் வகுப்பை விட்டு வெளியே வந்து சுதந்திரமாக சுற்றுவதற்கான வாய்ப்பாகவும் இருந்தது.

இங்க வா" என்று தலையை மேலிருந்து கீழாக மெதுவாக ஆட்டினாள் கோமதி டீச்சர்.

முன்வரிசையில் உட்கார்ந்திருந்த முருகேசன் எந்திரிச்சு டீச்சர் பக்கத்தில் போனான்.

மேஜையில் இருந்த ஹேன்ட்பேக்குக்குள் கையை விட்டுத் துழாவினாள். பர்ஸ் கிடைத்ததும், அதிலிருந்து ரெண்டு ரூபாய் எடுத்து, ``ஐம்பது பைசாவுக்கு தீப்பெட்டி, ஒரு ரூபாய்க்கு சூடம், மீதி ஐம்பது பைசாவுக்கு பத்தி வாங்கிக்க, நம்ம ஸ்கூல்ல இருக்கிற பிள்ளையார் கோயில்ல போய் சூடம் ஏத்தி கொளுத்திட்டு அணையற வரைக்கும் பக்கத்துலயே நில்லு, அப்டியே பத்தியவும் சைடுல பொருத்தி வைச்சிட்டு வந்துரு" என்று சொன்னாள், அவன் சரி என்று தலையாட்டியபிறகே அவனிடம் ரெண்டு ரூபாய் கொடுத்தாள்.

முருகேசன் 15 நிமிடத்தில் வந்தான். நேராக டீச்சரிடம் போய் சொன்னான், "டீச்சர், கரெக்டா எல்லாம் வச்சிட்டேன்" என்றான். "HM யாரும் பார்க்கலயே" என்றாள். அவன் "இல்லை" என்றான்.

முருகேசன் இன்றுதான் 6ஆம் வகுப்பிலிருந்து 7 ஆம் வகுப்புக்கு வந்திருக்கிறான். கோமதி டீச்சர்தான் அவனுக்கு கிளாஸ் டீச்சர். இன்று முதல் கோமதி டீச்சருக்கான வேலைகளைச் செய்வதற்கு புது அடிமை கிடைத்துவிட்டான்.

ஆங்கில வகுப்பு 11 மணிக்கு முடிந்தது.

``முருகேசா" என்று கூப்பிட்டாள் கோமதி டீச்சர்".

``என்ன டீச்சர்" என்று பவ்யமாக வந்தான்.

``உனக்கு நம்ம ஸ்கூலுக்குப் பின்னால இருக்கற வளைவு ரோடுல மூர்த்தி டீ ஸ்டால்னு ஒண்ணு இருக்கு தெரியுமா?" என்றாள்.

``தெரியாது டீச்சர்" என்றான்.

``அது ஒண்ணும் பிரச்னையில்லடா, நாலு பேர்ட்ட கேட்டா சொல்லப் போறாங்க, அங்க போய் 2 மசால் வடை, 2 மெதுவடை, அப்படியே ஸ்வீட் ஏதாவது போட்டிருந்தாங்கன்னா போண்டா, முட்டைகோஸ், சுசியம், போளி, எதுவா இருந்தாலும் 2 வாங்கிட்டு வா, இதுல ஐம்பது ரூபா இருக்கு" என்று கொடுத்தாள்.


டீச்சர், "துணைக்கு யாரையாவது கூட்டிட்டுப் போட்டா?" என்றான்

``சரி, கண்ணனைக் கூட்டுப்போ" என்றாள்.

சுடச்சுட எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தான். எல்லாவற்றையும் ரசித்து, ருசித்து சாப்பிட்டார் கோமதி டீச்சர். இப்போது, கோமதி டீச்சர் அறிவியல் பாடம் தொடங்கினார். மணி 12:20 இருக்கும், மணியைப் பார்த்துக்கொண்டே முருகேசா என்றார், "என்ன டீச்சர்" என்றான்.

"உனக்கு Gasper Convent School எங்கருக்கு தெரியுமா என்றார்"

"கேள்விப்பட்டிருக்கேன், ஆனா கரெக்டா தெரியாது" என்றான்.

"நம்ம ஸ்கூல்லருந்து வலது பக்கம் கொஞ்ச தூரம் போய்க்கிட்டே இருந்தா ஒரு முருகன் கோயில் வரும், அங்க இருந்து வலது பக்கம் போனா ஸ்கூல் வரும். என் பையன் அங்கதான் படிக்கான்". என்றார்.

ஸ்கூலுக்குப் போயி ஹரிபிரசாத் ன்னு கேளு, 6th B, என் பையன்தான் அவன்கிட்ட இந்தச் சாப்பாட்ட குடுத்துட்டு வந்துரு, புள்ள பசியில இருப்பான்" என்றார்.

முருகேசன் மீண்டும் நடக்கத் தொடங்கினான். ஸ்கூலை தேடிப்போய்க் கண்டுபிடித்தான். கோமதி டீச்சர் பையன் பெரிய நாமமிட்டிருந்தான். சிவப்பாக இருந்தான். சிரித்துக்கொண்டே இவன் கையிலிருந்த சாப்பாட்டு கேரியரை வாங்கிக்கொண்டான்.

மத்தியானம் 3.30 மணி ஆனது. இப்போது முருகேசன் சமூக அறிவியல் பாடத்தை வாசிக்கத் தொடங்கினான். எல்லார் முன்னாலும் நின்று முழுப் பாடத்தையும் வாசித்தான். அவன் வாசித்து முடித்தபின் ஒவ்வொருவராக ஒரு ஒரு பத்தி வாசித்தார்கள்.

"டேய் முருகேசா, கால் எதும் வலிக்கலையே", என்று சேரில் உட்கார்ந்து கொண்டே கேட்டார் கோமதி டீசசர்.

அவன், "இல்ல டீச்சர்" என்றான்.

"அப்போ, இங்க வா" என்றார்.

அவன் போனதும், ``அந்தா தெரியுது பாரு", என்று ஜன்னல் வழியே காண்பித்து,"அங்க போயி கரும்புச்சாறு Fresh-ஆ வாங்கிட்டு வா" என்றார்.

``சரி டீச்சர்" என்று தலையாட்டிக்கொண்டே போனான்.

"டீச்சர், கண்ணனைக் கூப்பிடட்டுமா" என்றான்.

"பக்கத்துல போறப்ப தனியாதான் போணும், போ" என்றார்.

இது முருகேசனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாகிவிட்டிருந்தது. கோமதி டீச்சர் தினந்தோறும் அவனை வேலை வாங்குவதை வழக்கமாக்கியிருந்தார். டீச்சர் சொன்னா செய்ய வேண்டும் என்று அவன் மூளையில் பதிவாகியிருந்தது. இன்னொரு பக்கம் வகுப்பை விட்டு வெளியே வந்து சுதந்திரமாக சுற்றுவதற்கான வாய்ப்பாகவும் இருந்தது.

அது புதன்கிழமை மாலை. கோமதி டீச்சர் பாடங்களை எல்லாம் நடத்திவிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். 4 மணி இருக்கும்.

"முருகேசா, இப்பதான் ஞாபகத்துக்கு வந்தது, மெடிக்கலுக்குப் போணும். படியிறக்கத்துல செண்பகம் மெடிக்கல்ஸ்னு இருக்கும், போய் இந்த மாத்திரையெல்லாம் வாங்கிட்டு வா, சீக்கிரம் வந்துரு" என்று சொல்லிக் காசை கொடுத்தார்.

அவன் காசை வாங்கிக்கொண்டு தனியாகப் போனான். அந்தக் கடை பூட்டியிருந்ததால் அங்குமிங்கும் அலைந்தான். கடைசியாக, ஒரு கடையில் போய் வாங்கினான். அதற்குள், ஸ்கூல் பெல் அடித்துவிட்டது. ஸ்கூல் மொத்தமும் காலியானது. கோமதி டீச்சர் வகுப்பிலேயே உட்கார்ந்திருந்தார். முருகேசன் வந்ததும் அவனை அடிக்காத குறையாகத் திட்ட ஆரம்பித்தார். "கடை இல்லன்ன வந்திருக்க வேண்டிதான, நாளைக்கு எல்லாத்துக்கும் தெரிஞ்சுபோச்சுன்னா என்னைத்தான திட்டு வாங்க" என்று சொல்லிக்கொண்டே மருந்துகளை வாங்கிக்கொண்டு போனார் . அவனுக்கு சங்கடமாகிவிட்டது.

கோமதி டீச்சருக்கு ஏதோ ஒரு வியாதி இருந்தது. சிலசமயம் அது வகுப்பிலேயே வெளிப்படுவதுண்டு. கிளாஸ் எடுக்கும்போது திடீரென இரும ஆம்பிப்பாள். இருமல் கொஞ்ச நேரத்தில் அதிகமாகி குளிர் ஜுரம் வந்தது போல் நடுங்க ஆரம்பிப்பார். வாயிலிருந்து எச்சில் ஊறும். 10 நிமிடங்களுக்கு மேல் நிலைகுலைந்து போவார். இந்த வியாதிக்காகவே அடிக்கடி மருந்துகளை உட்கொண்டார்.

அன்று வியாழக்கிழமை. காலை 10:20 இருக்கும். முருகேசனை வரச்சொல்லி கையசைத்தார். "கோயிலுக்குப் போயி பூஜை பண்ணணும் தட்சிணாமூர்த்திக்கு" என்றார். "இதுல ஐம்பது ரூபாய் இருக்கு. கோயில் எதிரில உள்ள கடையிலேயே பூஜை சாமானெல்லாம் வாங்கிக்கோ" என்றார். "இந்த பேப்பர்ல எழுதின பேரையெல்லாம் சொல்லி அர்ச்சனை பண்ணு". "HM நிக்காருன்னு பாரு. அவர் இருந்தா கிளாஸ்க்கு வந்துட்டு பத்து நிமிசம் கழிச்சிப் போ" என்றார்.

முருகேசன் கோயிலுக்குப் போனான். கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோயிலை விட்டு வெளியே வந்தான். அங்கே பெரும் போலீஸ் கூட்டம் நின்று கொண்டிருந்தது. பக்கத்தில் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. சொத்துத் தகராறு பிரச்னையில் இரண்டு பேர் ஒரே நேரத்தில் வெட்டிக்கொலை என்றும் கொலையாளிகள் தப்பி ஓட்டம் என்றும் பேசிக்கொண்டிருந்தார்கள். முருகேசன் `இன்னைக்கு எப்படி ஸ்கூலுக்குப் போகப்போறேன்' என்று பயந்தான். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தை விட்டு வெளியே வந்தான். எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாய் நடந்து ஸ்கூலை அடைந்துவிட்டான்.

கோமதி டீச்சர் அழுதே விட்டார். "உனக்கு எதுவும் ஆகலையே, நல்ல வேளை கொலை முடிஞ்சதுக்கப்புறம் போன, இல்லன்ன என்ன ஆயிருக்கும்" என்றார்.

முருகேசன் மெளனமாக நின்றுகொண்டே இருந்தான்.

மறுநாள் முருகேசன் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தான். "முருகேசா என்றார், ``டீச்சர்" என்றபடியே வந்தான். உனக்கு "கூட்டுறவு பேங்க் தெரியுமா" என்றார். "வளைவு ரோட்ல போனா ஒரு ரைஸ் மில் இருக்கும். அதுக்கு எதுத்தாப்ல இருக்கும்" என்றார். "போய் இந்தப் பணத்தைக் கட்டிட்டு ரசீது வாங்கிட்டு வந்துரு" என்றார். "கவனமா போ, ஏதாவது பிரச்னைன்னா வேகமா எங்கயாவது போய் மறைஞ்சுக்கோ, எப்போ எது நடக்கும்னு சொல்ல முடில" என்றார்.

பயந்துகொண்டே நடந்தான் முருகேசன். பேங்க்கை எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிட்டான். பேங்க்கில் நிறைய பேர் இருந்தார்கள். அரை மணி நேரத்துக்கும் மேலாக நின்றான். வகுப்புக்கு வந்த போது மணி 12 ஐ தாண்டியிருந்தது. வெயிலில் நடந்து வந்ததால் களைத்துப் போயிருந்தான். அப்போது Class Test நடந்துவந்தது. உக்கிரமான வெயிலில் நடந்து வந்திருந்ததால் எல்லா பாடத்தையும் மறந்துபோயிருந்தான். எதையும் எழுத தெரியாமல் கேள்வியையே திரும்பத் திரும்ப எழுதிவைத்தான். பேப்பர் திருத்தும்போது கோமதி டீச்சர் அவனைக் கூப்பிட்டார். "ஏன்டா 2 பாடத்தைக் கூட உன்னால படிச்சிட்டு வர முடியல" என்று அடிக்க ஆரம்பித்தார். அவன் எதுவும் பேசாமல் அடிவாங்கிக்கொண்டே இருந்தான்.

மறுநாள் கோமதி டீச்சர் புதுச்சேலைக் கட்டி வந்திருந்தார். தங்களது மகனுக்கு பிறந்தநாள் என்று இனிப்பு கொண்டுவந்திருந்தார். முருகேசனைக் கூப்பிட்டுக் கோயிலுக்குப் போய் பூஜை செய்து வர அனுப்பினார். முருகேசன் கோயிலுக்குப் போய் லேட்டாக வந்தான். அதற்குள் ஸ்வீட் மொத்தமும் காலியாயிருந்தது. "ஸாரிடா, சீக்கிரம் காலியாயிருச்சு, உனக்கு நாளைக்குக் கொண்டு வாரேன்" என்றார்.

பக்கத்து வகுப்பில் தடித்த ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் ஒரு நாளும் அவர் கோமதி டீச்சரிடம் எதுவுமே பேசியதில்லை.

அன்று மத்தியானமே அவனைக் கூப்பிட்டாள். ``உனக்கு நம்ம ஊர் Post office தெரியுமா" என்றாள்."தெரியும் டீச்சர்" என்றான். அங்க போய் இந்த Register Post ஐ அனுப்பிட்டு வாரியா" என்றாள். "சரி" என்று தலையாட்டிக்கொண்டே போனான். Post office ரொம்ப தூரத்தில் இருந்ததால் ஸ்கூல் முடிவதற்கு 5 நிமிடம் முன்னால்தான் போய்ச் சேர்ந்தேன்.

மறுநாள் டீச்சர் அவனுக்காக மட்டும் ஸ்வீட் கொண்டுவரவில்லை.

கோமதி டீச்சரின் மூத்த பெண் காதல்வயப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்து அவரது முகம் கலக்கத்தில் இருந்தது. கிளாஸ் தொடங்கியது. "முருகேசா" என்றார். "பஸ்ஸ்டாண்டுக்குப் போனும், பஸ் ஸ்டாண்டு பின்னால குறுகலா சந்து ஒண்ணு போகும். அங்க, திலக் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் ன்னு இருக்கும். அங்க போய், எம்மகள் யார்கிட்டயாவது பேசிக்கிட்டுருக்காளான்னு பாரு, எம் மகள் போட்டோ இதான்" என்று கொடுத்தார் கோமதி டீச்சர்.

"மறைஞ்சிருந்து பாரு, யாருக்கும் சந்தேகம் வந்துரக்கூடாது" என்றாள். "சரி" என்று தலையாட்டிவிட்டுப் போனவன், அவன் அந்த இடத்தை தேடிக் கண்டுபிடித்து உளவு பார்த்து விட்டு கிளாஸ்க்கு வருவதற்கே 12 மணியைத் தாண்டியது. அன்று முழுவதும் அவனுக்கு அலுப்பாகவே இருந்தது. பத்து நாள்கள் தொடர்ந்து போய்ப் பார்த்தான். "யாரும் இல்லை டீச்சர்" என்று அவன் சொன்னபிறகுதான கோமதி டீச்சரின் முகம் தெளிவடைந்தது, நல்ல வேளை யாரையும் காதலிக்கவில்லை என்று சந்தோஷப்பட்டார்.

வருடத்தின் பெரும்பாலான நாள்கள் முருகேசன் இப்படித்தான் அலைக்கழிக்கப்பட்டான். அவன் எந்த நாளிலும் முழுமையாக வகுப்பில் இருந்ததில்லை. அவனுக்கென்று எந்தப் பாடங்களும் தனியாக எடுக்கப்பட்டதுமில்லை. அவன் தொடர்ந்து கணக்கில் ஃபெயில் ஆனதால் கணக்கு வகுப்புகளை மட்டும் அவனைக் கூப்பிட்டு சொல்லிக்கொடுத்தார். மற்ற பாடங்களையெல்லாம் அவனாகவே படித்தான் அல்லது பக்கத்துப் பசங்களிடம் கேட்டுப் படித்தான். ஒருபோதும் இதைக் குற்ற உணர்ச்சியாக அவர் கருதவில்லை.

அந்த வருடத்தின் முழுப் பரீட்சை தொடங்க ஆரம்பித்திருந்தது. ஒவ்வொரு பரிட்சையாக முடிந்தது. கடைசிப் பரிட்சை நடந்து கொண்டிருந்தது. கோமதி டீச்சர் எல்லோரையும் கூப்பிட்டுப் பேசவில்லை. முருகேசனை மட்டும் கூப்பிட்டுச் சொன்னார் "8 ஆங் கிளாசுக்குப் போனதுக்கப்புறம் என்னை மறந்துட மாட்டியே" என்றார்."இல்ல டீச்சர்" என்றான். "அப்பப்போ என்கிட்ட வந்து பேசணும்" என்றார். "முருகேசன் தலையாட்டிவிட்டுப் போனான்"

2 மாதம் முழுப்பரீட்சை லீவு முடிந்து மறுபடியும் ஸ்கூல் தொடங்கியது. முருகேசன் 8 ஆம் வகுப்பில் சேர்ந்தான். ராஜலக்ஷ்மி என்ற டீச்சர் புதிதாக வந்திருந்தார். அவருக்கு 50 வயது இருக்கும். பெரும்பாலான முடிகள் நரைத்திருந்தது.

முதல் நாள் வகுப்பு என்பதால் பாடம் எதுவும் நடத்தப்படவில்லை. எல்லோரையும் சும்மா உட்காரச் சொல்லிவிட்டு நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார் ராஜலக்ஷ்மி டீச்சர். முருகேசன் ஜன்னலின் ஓரமாய் உட்கார்ந்திருந்தான். காலை 11:30 இருக்கும். தூரத்தில் ஒரு பையன் டீ வாங்கிக்கொண்டு வருவதைப் பார்த்தான். "டீச்சர் பாத்ரூம்" என்று கையைக் காட்டிவிட்டு வகுப்புக்கு வெளியே வந்தான்.

நேராக அந்தப் பையனிடம் போய்க் கேட்டான், "டீ யாருக்கு வாங்கிட்டுப்போற?" என்றான்.

அவன், ``கோமதி டீச்சருக்கு" என்று பதில் சொன்னான்.

முருகேசன் "புது அடிமை" "புது அடிமை" என்று முனகிக்கொண்டே வகுப்புக்குள் நுழைந்தான்.

ரத்னவேல் 




Post a Comment

0 Comments