Ticker

10/recent/ticker-posts

மர்மமான தொப்பூர் கணவாய் மரண சாலை.. பேய் அச்சத்தில் ‘பெங்களூரு - சேலம் நெடுஞ்சாலை


 சேலம்: பெங்களூருவில் இருந்து சேலம் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்கும் இடம் தொப்பூர் கணவாய். 3 கிமீ நீளமுள்ள இந்த கணவாயை அமானுஷ்ய சக்திகள் மிகுந்த மர்மம் நிறைந்த கணவாய் என்று அந்த பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.


இங்கு அடிக்கடி விபத்து நடக்க அமானுஷ்ய சக்திகள் காரணம் என்று வாகன ஓட்டிகளும் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் விபத்துக்கு இவர்கள் கற்பனையாக கூறும் இது தான் காரணமா அல்லது வேறு என்ன என்பதை இப்போது பார்க்கலாம். தருமபுரி மாவட்டத்தில், பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பகுதி தான் 'தொப்பூர் கணவாய்'. இந்த சாலை சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர் என்னும் கிராமத்தின் அருகே உள்ளது.

சேலம் தர்மபுரி இணைப்பு தர்மபுரியில் இருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த கணவாய். சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தை இணைக்கும் மூன்றரை கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை மலைகளும் காடுகளும் அடர்ந்த வனப்பகுதியாகும்.

தொப்பூர் கணவாய் தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடைபெறும் பகுதி எது என்று கேட்டால், தொப்பூர் கணவாய் என்று வாகன ஓட்டிகள் நொடிப்பொழுதில் சொல்லிவிடுவார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் சாலையாக தொப்பூர் கணவாய் சாலை பார்க்கப்படுகிறது.

மரண சாலை இங்கு கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 40க்கும் மேற்பட்ட விபத்துகளும், 50க்கும் மேற்பட்ட உயிரிழப்பும் 300க்கும் மேற்பட்டோருக்கு காயம் என மோசமான மரண சாலையாக திகழ்கிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல பல ஆண்டுகளாக ஏராளமான விபத்துக்கள் நடந்துள்ளது. இந்த சாலையில்தான் எண்ணெய் லாரிகள் மோதி தீப்பிடித்து மிக அபாயகரமான விபத்து நடந்திருக்கிறது.

பயங்கர விபத்து நேற்று (நவ 25) கூட மிக பயங்கர விபத்து நடந்துள்ளது. தொப்பூர் கணவாய் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்று கொண்டிருந்த கார்மீது குஜராத் மாநிலத்தில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு நூல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி காரை பின்தொடர்ந்து சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது ஏறியது. இதில், காரில் இருந்த சத்தியவாணி, அன்புமணி, கவிதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் ரமேஷ் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பயப்படுகிறார்கள் இரவு வேளைகளில் எவ்வளவு சிறப்பான டிரைவராக இருந்தாலும் தடுமாற்றத்துடன் வாகனம் ஓட்டும் இடம் என்றால் அது தொப்பூர் கணவாய் தான் இதற்கு காரணம் என்னவென்று கேட்டால் அங்கு பேய்கள் இருப்பதாக கட்டுக்கதைகளை சொல்லும் அந்த பகுதி ஓட்டுநர்கள், அந்த சாலையில் வாகனத்தை இரவு வேளைகளில் ஓட்டவே பயப்படுகிறார்களாம்.

பேய்கள் உலா பகுதி இருமலைகளை இரவு நேரங்களில் பேய்கள் கடப்பதாகவும் அந்த பேய்கள் கடக்கும் நேரத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதாகவும் சில வாகன ஓட்டிகள் கற்பனை கதைகளை சொல்லுகிறார்கள். பேய்கள் உலாவும் பகுதி மற்றும் விபத்து மிக அதிகம் நடக்கும் பகுதி என பீதி நிறைந்த அந்த இடத்தில் தான் அந்த பகுதி மக்கள் எல்லாம் சேர்ந்து ஆஞ்சநேயர் கோயில் கட்டியிருக்கிறார்கள்.

மலைச்சாலை இந்த மர்மம் நிறைந்த 3.5 கிலோமீட்டர் கணவாய் முற்றிலும் மலைப்பகுதி என்பதால் அபாயகரமான வளைவுகள் அதிகமாக உள்ள சாலையாகும்.. எப்படி மலைப்பகுதியில் வாகனத்தை இரண்டாவது கியரில் செல்கிறோமோ அப்படித்தான் இந்த சாலையில் செல்ல வேண்டும் என்கிறார்கள் அனுபம் நிறைந்த வாகன ஓட்டிகள்.

கட்டுப்படுத்த முடியாது காரணம் சாலை மேடு பள்ளமாகவும், வளைவுகள் மோசமாகவும் மலைப்பாங்காகவும் இருப்பதால் மற்ற சாலைகளைப் போல் இந்த சாலையில் அதிவேகத்தில் வந்தால் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார்கள். அதனால் வாகனத்தை கட்டுப்படுத்த தவறும் லாரி ஓட்டுநர்கள் முன்னால் செல்லும் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிவிடுகிறார்கள். அல்லது கட்டுப்படுத்த தெரியாமல் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழக்கிறார்கள்.

ஒலிப்பெருக்கி எனவே தொப்பூர் கணவாய் பற்றி தெரியாதவர்கள் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி செல்லும் போது விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் குறிஞ்சி நகர் சுங்கசாவடியில் ஒலிப்பெருக்கியில் வாகனத்தை இரண்டாவது கியரில் இயக்க வேண்டும் என்றும் அபாயகரமான மலை சாலை உள்ளது என்று எச்சரிக்கிறார்கள். விபத்துக்கு சாலைகள் அமைந்துள்ள இடத்தின் தன்மையே காரணம் தவிர. வேறு எந்த அமானுஷ்ய சக்தி இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.


Post a Comment

0 Comments